நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…
நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். பீகாரில் நீட் மோசடி சம்பவமும் அரங்கேறியது.

சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு ஆகும். இந்தத் தேர்வின் மூலம், MBBS, பல் மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி போன்ற படிப்புகளில் சேருவதற்கு ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வாகும். இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தியது.
நீட் தேர்வானது நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இது ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 13 மொழிகளில் நடத்தப்பட்டது. நாடு முழுவதில் இருந்து சுமார் 20.8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் இந்த நுழைவு தேர்வை எழுதியதாக கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்ற இந்த நீட் நுழைவுதேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் வழக்கம் போல இந்த ஆண்டும் கடும் சோதனைகளை சந்தித்த்னர். குறிப்பாக, திருப்பூர் திருமுருகன்பூண்டி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவி, தான் அணிந்திருத்த சுடிதாரில் அதிக பட்டன் இருக்கிறது எனக் கூறி தேர்வு எழுத மறுக்கவே , அதன் பிறகு பெண் காவலர் உதவியோடு வேறு ஆடை வாங்கி நீட் தேர்வு எழுதிய சம்பவங்களும் அரங்கேறின.
மதுரையில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர் ஆதார் கார்டை மறந்து வைத்துவிட்டு தேர்வு மையம் வந்துவிட, உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் அவருடைய செல்போன் கொடுத்து உதவினர். அதேபோல ஒரு மாணவி தர்மபுரி தேர்வு மையம் செல்வதற்கு பதிலாக சேலம் மையத்திற்கு வந்துவிட்டார். கண்ணீருடன் நின்ற மாணவியிற் அழைத்து அவரை தேர்வு எழுத வேண்டிய மையத்திற்கு காவலர் அழைத்து சென்றார்.
திருவாரூரில் ஒருவர் தனது மனைவியை நீட் தேர்வு எழுத அழைத்து வந்துள்ளார். அப்போது தாலி அனுமதிக்க மறுக்கவே உடனடியாக தாலியை கழட்டி வாங்கி கொண்டார் மாணவியின் கணவர். நெல்லை பாளையங்கோட்டை, புதுக்கோட்டை கறம்பக்குடி ஆகிய பகுதி நீட் தேர்வு மையத்தில் 2 மாணவிகள் தேர்வு எழுத காத்திருந்த சமயம் மயங்கி விழுந்ததால் அங்கு சிறுது பரபரப்பு நிலவியது. தாமதமாக வந்ததால் திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சில மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.
தற்கொலை :
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கயல்விழி என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முந்தைய நாள் வரை நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்துக்கொண்டார் பிறகு தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் நீட் எதிர்ப்பு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நீட் மோசடி :
பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் தேர்வு நேற்று நடைபெறுவதற்கு முன்னதாகவே 20 மாணவர்களுக்கு நீட் வினாத்தாள் கொடுக்கப்பட்ட மோசடி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரத்தில் பெற்றோர்கள் உள்ளிட்ட 13 பேர் இதுவரை கைதாகியுள்ளனர். இவ்விவகாரத்தில் சிக்கந்தர் யாதவேண்டு என்பவர் தனி வீடு வாடகைக்கு எடுத்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார்.