வெற்றி பேரணியில் தமிழ்நாடு… தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகப்படுத்திய விஜய்!
தவெக தலைவர் விஜய் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறைக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வெற்றிப் பேரணி ‘தமிழ்நாடு’ என்கிற நிகழ்ச்சியில் mytvk உறுப்பினர் சேர்க்கை செயலியை இன்று (ஜூலை 30, 2025) காலை 11 மணிக்கு அறிமுகப்படுத்தினார். இந்த செயலி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை எட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘ஊருக்கு ஊர்! வீதிக்கு வீதி! வீட்டுக்கு வீடு!’ என்ற நோக்கத்தின் கீழ், தவெகவின் 69,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் (பூத் கமிட்டி உறுப்பினர்கள்) மூலம் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட உள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள் எளிதாக கட்சியில் இணையலாம், மேலும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்க்கும் பணியை மேற்கொள்வார்கள் என்று தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்தார்.
விஜய், செயலி அறிமுக நிகழ்ச்சியில் பேசுகையில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையுடன், தமிழக மக்களின் நலனுக்காக பணியாற்ற இந்த செயலி ஒரு முக்கிய படியாக இருக்கும்,” என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த செயலி, உறுப்பினர் சேர்க்கை பணிகளை ஒருங்கிணைப்பதோடு, நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது. மேலும், அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளை விஜய் நேரில் சந்தித்து கௌரவிப்பார் என்றும் தவெக தலைமை அறிவித்துள்ளது. தவெகவின் இந்த முயற்சி, 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
July 30, 2025