தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெயில்...மழையும் இருக்கு - வானிலை மையம் அப்டேட்!

ஜூலை 15 முதல் 19 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 2°C முதல் 4°C வரை உயரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Hero Image

சென்னை: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூலை 15 மற்றும் 16: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், ஏனைய தமிழகப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். இருப்பினும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிதீவிர வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

ஜூலை 17: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். அதே நேரத்தில் வெப்பநிலையும் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஜூலை 18: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிதீவிர வெப்பநிலை தொடரும்.

ஜூலை 19 மற்றும் 20: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஜூலை 21: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜூலை 15 முதல் 19 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிதீவிர வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையற்ற நேரங்களில் வெயிலில் செல்வதைத் தவிர்த்து, போதிய அளவு தண்ணீர் அருந்தி முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது