த.வெ.க அரசு திட்டமிட்டு என் மீது வழக்கு பதிவு செய்துள்ளது - எ.வ.வேலு ஆதங்கம்!

நீதிமன்ற உத்தரவை ஏற்று, இன்று காலை 10:45 மணிக்கு விசாரணைக்கு ஆஜரானார். காலை 11 மணிக்குத் தொடங்கிய விசாரணையில், அனைத்துக் கேள்விகளுக்கும் 100% உண்மையான பதில்களை அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

Hero Image

சென்னை : சாலை அமைத்ததில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜரான முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவே தான் வந்ததாகத் தெரிவித்த அவர், "நேற்று முன்தினம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ASP) கொடுத்த கடிதத்தின் அடிப்படையில், இன்று காலை 10:45 மணிக்கு விசாரணை வளாகத்திற்கு வந்தேன்.

காலை 11 மணிக்குத் தொடங்கிய விசாரணை, விரிவான கேள்விகளுடன் நடைபெற்றது. விசாரணை அதிகாரி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் 100% உண்மையான பதில்களை நான் அளித்துள்ளேன்," என்று கூறினார். மேலும், "மீண்டும் எப்பொழுது அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்பதை அவர்களிடம் தெளிவாகச் சொல்லிவிட்டுத்தான் வெளியே வருகிறேன்," எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கை அரசியல் ரீதியான பழிவாங்கல் நடவடிக்கை என அவர் விமர்சித்தார். "மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை. நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை; தவெக அரசு திட்டமிட்டே என் மீது இந்த வழக்குப் பதிவு செய்துள்ளது," எனக் குற்றம் சாட்டிய அவர், "நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், விரிவான கருத்துகளைச் சொல்ல விரும்பவில்லை.

ஜூலை 28-ஆம் தேதி வழக்கு நீதிமன்றத்திற்கு வர இருக்கிறது, அங்கு நான் நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்," என்று தெரிவித்தார். காவல்துறை குறித்த கேள்விக்கு பதிலளித்த எ.வ.வேலு, "அரசியல் மாற்றத்தால் ஆட்சிகள் மாறினாலும், காவல்துறை நிரந்தரமானது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை திமுக ஆட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய அதே காவல்துறைதான் இப்போதும் உள்ளது. அவர்கள் முறைப்படிதான் விசாரணை நடத்தினார்கள், நானும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். எனவே காவல்துறை மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை," என்றும் பதிலளித்தார்.

த.வெ.க அரசு திட்டமிட்டு என் மீது வழக்கு பதிவு செய்துள்ளது - எ.வ.வேலு ஆதங்கம்!