துணிச்சலான நடவடிக்கை! கரூர் இனாம் நில விவகாரத்தில் விஜய்யைப் பாராட்டிய சண்முகம்!

அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் தவெகவில் (தமிழக வெற்றி கழகம்) இணையும் நிகழ்வுகள் தொடர்கின்றன. இதைப் பாஜகவுடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் அரசியல் யூகங்களுக்குச் சண்முகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழ்நாட்டு அரசியலில் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ள எம்.எல்.ஏ-க்களின் கட்சி தாவல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் விவகாரங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதேவேளையில், முதலமைச்சர் விஜயின் சமீபத்திய அரசு உத்தரவை அவர் வரவேற்றுப் பாராட்டியுள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைவதையும், பாஜக பிற கட்சிகளை உடைப்பதையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது என்று சண்முகம் தெளிவுபடுத்தியுள்ளார். "பிற கட்சிகளை உடைத்து, அதன் மூலம் தனது பலத்தை அதிகரித்துக் கொள்வது பாஜகவின் அரசியல் வியூகம். இது ஜனநாயகத்திற்கு எதிரானது," என்று சாடியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் "தனிநபர்கள் ராஜினாமா செய்துவிட்டுப் பிற கட்சிகளில் இணைவதை, பாஜகவின் திட்டமிட்ட உடைப்பு நடவடிக்கைகளோடு தொடர்புபடுத்த வேண்டாம். இந்த குதிரை பேர அரசியல் கலாசாரத்தைக் கண்டு மக்கள் கோபப்பட வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த 'இனாம் நிலம்' தொடர்பான சிக்கலுக்குத் தமிழ்நாடு அரசு தீர்வு கண்டிருப்பதை சிபிஎம் வரவேற்றுள்ளது.

இது தொடர்பாகவும் பேசிய அவர் "இனாம் நிலங்களை கோயில் நிலங்கள் என்று தவறாகச் சித்தரித்து, இந்துத்துவ அமைப்புகள் நீண்ட காலமாக விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்து வந்தன. நீதிமன்றத் தடைகளைத் தாண்டி, இந்த நிலங்களைப் பதிவு செய்ய அனுமதி வழங்கி முதலமைச்சர் விஜய் எடுத்திருப்பது மிகவும் துணிச்சலான நடவடிக்கை," என்று சண்முகம் பாராட்டியுள்ளார்.

இது கரூர் மாவட்டத்திற்கு மட்டும் அல்லாமல், தமிழ்நாடு முழுவதும் இத்தகைய பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் பொருந்தும் வகையில், இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தத் தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர்.