சென்னை மக்களுக்கு குளுகுளு செய்தி! முதன்முதலாக ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடக்கம்….
தமிழ்நாட்டின் முதல் ஏசி பெட்டிகள் அடங்கிய மின்சார ரயில் சேவை இன்று முதல் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலும், தாம்பரம் வரையிலும் இந்த சேவை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7 மணி அளவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஏசி பெட்டி மின்சார ரயில் சேவை சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடம் மற்றும் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.
ரயில் சேவை அட்டவணை :
- காலை 7 மணி – சென்னை கடற்கரை (7.00 am) முதல் செங்கல்பட்டு (8.35 am) வரை.
- காலை 9 மணி – செங்கல்பட்டு (9.00 am) முதல் சென்னை கடற்கரை (10.30 am) வரை.
- பிற்பகல் 3.45 மணி – சென்னை கடற்கரை (3.45 pm) முதல் செங்கல்பட்டு (5.25 pm) வரை.
- மாலை 5.45 மணி – செங்கல்பட்டு (5.45 pm) முதல் சென்னை கடற்கரை (7.15 pm) வரை.
- காலை 7.35 மணி – சென்னை கடற்கரை (7.35 pm) முதல் தாம்பரம் (8.30 pm) வரை.
- ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சேவைகள் இயக்கப்படாது.
பயணிகளுக்கான வசதிகள் :
- தானியங்கி ஸ்லைடிங் கதவுகள் (மெட்ரோ ரயில் சேவை போன்றவை).
- GPS-அடிப்படையிலான LED டிஸ்பிளேக்கள் மற்றும் பயணிகள் தகவல் அறிவிப்பு அமைப்பு.
- CCTV கேமராக்கள், பெரிய சீல் செய்யப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள்,
இந்த ஏசி பெட்டிகள் அடங்கிய மின்சார ரயிலில் 1,116 இருக்கைகள் மற்றும் 3,798 நின்று பயணிக்கும் இடம் என மொத்தம் 5,280 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டிகளில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.