சென்னை :நல்ல பாதையில் செல்ல வேண்டும், தைரியமாக முன்னேறுங்கள், மக்களுக்காக செய்யுங்கள் என விஜய்க்கு எம்.பி. கமல்ஹாசன் அட்வைஸ் செய்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்றைய தினம், நாகப்பட்டினத்தில் புத்தூர் அண்ணா சிலை அருகே பரப்புரை நடைபெற்றது. மேலும், திருவாரூர் தெற்கு வீதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்பொழுது, திமுக பற்றியும் முதலவர் ஸ்டாலின் பற்றியும் நேரடியாக விமர்சித்தார். இதற்கு திமுக அமைச்சர்கள் விஜய்யை விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், வருகின்ற 2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான நெல்லை மண்டல நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கட்சியின் நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன்,”ரசிகர்கள் கூட்டம் ஓட்டாக மாறாது. அது விஜய்க்கு மட்டுமல்ல எனக்கும் பொருந்தும். நல்ல பாதையில் செல்ல வேண்டும், தைரியமாக முன்னேறுங்கள், மக்களுக்காக செய்யுங்கள். எங்கள் தகுதியை நிரூபித்துக் கொண்டு திமுகவிடம் தொகுதி கேட்பதுதான் நியாயமாக இருக்கும்” என்று கூறிருக்கிறார்.
