2 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட்.., பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய மாவட்ட நிர்வாகம்.!

2 நாட்களுக்கு உதகையில் மிக அதி கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

tn red alert rain

சென்னை :தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அந்த இரண்டு மாவட்டங்களுக்கும் ரெட் அலெர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளிலும், தேனி, தென்காசி, குமரியில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல்லில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகையில் 2 நாட்களுக்கு சுற்றுலாத்தலங்கள் மூடப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி அறிவித்துள்ளார். மேலும், அவர் பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.

அதன்படி, உதகையில் நாளையும் (மே 29) நாளை மறுநாளும் (மே 30) சுற்றுலாத்தளங்கள் மூடப்படும். நடுவட்டம் சாலை வழியாக கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் செல்லத் தடை. சுற்றுலா வாகனங்கள் கூடலூர் நடுவட்டம் பைக்காரா வழியாக உதகைக்கு வருவதை தவிர்க்க வேண்டும். அரசு பேருந்துகள் பகல் நேரங்களில் மட்டுமே இயங்கும்.

ஆம்புலன்ஸ், உள்ளூர் வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு இயங்கும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளை தவிர, வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.