வேங்கை வயல் விவகாரம்.! 11 பேரிடம் டிஎன்ஏ சோதனை.! நீதிமன்றம் உத்தரவு.!

புதுக்கோட்டை, வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் 11 பேரின் டிஎன்ஏ பரிசோதிக்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை, வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் 11 பேரின் டிஎன்ஏ பரிசோதிக்கப்பட உள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்தனர். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகிய இந்த சம்பவத்தை ஆரம்பத்தில் தமிழக காவல்துறையினர் விசாரணை செய்தனர். வேங்கைவயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 70 க்கும் மேற்பட்டோர்களிடம் 20 நாட்கள் விசாரணை செய்தனர்.

விசாரணை குழு :

அதன் பின்னர் வழக்கானது சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இன்றோடு கிட்டத்தட்ட 105 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர். வேங்கைவயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 147 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், அண்மையில் தனிநீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் விசாரணை குழு ஒன்றையும் தமிழக அரசு நியமித்தது அவர்களும் தங்கள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

11 பேர் :

தற்போது, சிபிசிஐடி போலீசார் , 147 பேரிடம் நடத்திய விசாரணையில் இறுதியாக 11 பேர் மீது இறுதிக்கட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஏற்கனவே மலம் கலந்த குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அந்த மாதிரிகளை வைத்துக்கொண்டு, 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்து அந்த மாதிரிகளை குடிநீர் மாதிரிகளுடன் ஒப்பிட வேண்டும் எனவும், 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும், புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தை சிபிசிஐடி போலீசார் அணுகினர்.

இறுதிக்கட்டம் :

இந்த மனுவை ஏற்று, நீதிபதி சத்யா, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைத்து 11 பேரின் மாதிரிகளை எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. மருத்துவ மாதிரிகள் கிடைத்தவுடன், அவை ஒப்பிட்டு பார்ப்பதற்காக தஞ்சாவூர் அல்லது சென்னை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் குற்றவாளிகள் யார் என்பது தெளிவாகும் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகள், போராட்டங்கள், சட்டப்பேரவை விவாதங்கள் என நீண்டு கொண்டே சென்ற புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம் தற்போது 11 பேருடன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.