அன்புஜோதி ஆசிரம வழக்கு.! காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.!

அன்பு ஜோதி ஆசிரம வழக்கு தொடர்பாக இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்

அன்பு ஜோதி ஆசிரம வழக்கு தொடர்பாக இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வாரம் தமிழகத்தை பதைபதைக்க வைத்த செய்திகளில் ஒன்று விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமம் குறித்தான வழக்கு. அனுமதியில்லா ஆதரவற்றோர் ஆசிரமம்.  பலரை காணவில்லை. மனநலம் சரியில்லாதோர்களை சங்கிலியால் கட்டி போட்டு சித்ரவதை என புகார்கள் அடுக்கிக்கொண்டே சென்றன.

ஆட்கொணர்வு மனு :வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் தனது மாமாவை இந்த ஆசிரமத்தில் சில வருடங்களுக்கு முன்னர் சேர்த்துவிட்டு அண்மையில் சில மாதங்களுக்கு முன்னர் வந்து பார்த்த போது தான் தனது மாமா அங்கு இல்லை காணாமல் போய்விட்டார் என தெரிந்தது. அதற்கடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்து இருந்தார்.

ஆசிரமத்திற்கு சீல் :அதன் பிறகு தான் ஆசிரம உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து, தற்போது ஆசிரம நிர்வாகிகள் 8 பேர் கைது செய்யப்பட்டு விட்டனர். ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் நலமாக இருந்தால் வீடுகளுக்கும், மற்றவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கும் , காப்பகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தேடும் பணி தீவிரம் :முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் 38 ஆண்கள், 16 பெண்கள் என 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வழக்கு காவல்துறையினரிடம் இருந்து சிபிசிஐடி காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்ட்டது . காணாமல் போனவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காவல்துறைக்கு உத்தரவு :இந்நிலையில் உறவினரை மீட்டுத்தரகோரி திருப்பூரை சேர்ந்த வெளிநாடுவ வாழ் தமிழர் கொடுத்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் , இதுவரை அன்பு ஜோதி ஆசிரம வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.