காதல் திருமணம் – கடத்தல் விவகாரம்.? இளம்பெண் பெற்றோருடன் செல்ல அனுமதியளித்த உயர்நீதிமன்றம்.!

தென்காசியில் வீடு புகுந்து கடத்தப்பட்டதாக கூறிய இளம்பெண்  தற்போது அவர் விருப்பப்படி எங்கு இருக்க ஆசைப்படுகிறாரோ அங்கு இருக்கலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை

தென்காசியில் வீடு புகுந்து கடத்தப்பட்டதாக கூறிய இளம்பெண்  தற்போது அவர் விருப்பப்படி எங்கு இருக்க ஆசைப்படுகிறாரோ அங்கு இருக்கலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

இளம்பெண் கடத்தல் :தென்காசியை அடுத்த கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் வினித் என்பவரும், வல்லம் முதலாளி குடியிருப்பைச் சேர்ந்த மர அறுவை மில் அதிபர் நவீன் படேல் மகள் கிருத்திகாவும் கடந்த மாதம் 20-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தைஅடுத்து கடந்த 25ம் தேதி வினீத் வீட்டிற்கு ஒரு கும்பல் வந்து கிருத்திகாவை வீடு புகுந்து கடத்தி சென்றதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

முன்ஜாமீன் :இந்த சம்பவத்தை அடுத்து, வினீத் தரப்பில் தனது மனைவி கிருத்திகாவை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனுவும், அதே போல, கிருத்திகா பெற்றோர் தரப்பில் முன் ஜாமீன் மனுவும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

காப்பகத்தில் இளம்பெண் :இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்ற போது, கடந்த 11ம் தேதி கிருத்திகா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜரானார். அப்போது கிருத்திகாவை 13ம் தேதி வரை காப்பகத்தில் வைத்து கவுன்சிலிங் கொடுத்து விரிவான விசாரணை நடத்த உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

யாரும் கடத்தவில்லை.? :இந்த உத்தரவை அடுத்து கிருத்திகாவிடம் ரகசிய வாக்குமூலம் வாங்கி அதனை சீலிடப்பட்ட கவரில் காவல்துறையினர் நீதிபதி முன்பு சமர்ப்பித்தனர். அதில் தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், பெற்றோருடன் செல்ல விருப்பம் எனவும் குறிப்பிடப்பட்டதாக தெரிகிறது.

இளம்பெண் விருப்பம் :உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, இளம்பெண் கிருத்திகா எங்கு இருக்க விருப்பம் தெரிவிக்கிறாரோ அங்கு அவர் இருக்கலாம் என கூறி உத்தரவிட்டார் . கிருத்திகாவின் பெற்றோர் தற்போது இங்கு இல்லை என்பதால், உறவினர் வீட்டில் இருக்கலாம் எனவும், உறவினர் அது தொடர்பாக மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அதுவரையில் கிருத்திகா  காப்பகத்தில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.