துரோகத்திற்கான நோபல் பரிசு இபிஎஸ்க்கு கொடுக்கலாம் – செங்கோட்டையன் ஸ்பீச்!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடருவேன் எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

sengottaiyan and eps

ஈரோடு :அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான பேட்டி அளித்தார். எப்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன்” என்று அவர் கூறினார்.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி (ஈபிஎஸ்) அதிமுகவுக்கு வருவதற்கு முன்பே நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் என்று தனது சீனியாரிட்டியை வலியுறுத்தினார். கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும் என்று விமர்சித்த அவர், நீக்கத்திற்கு எதிராக வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தார். இந்த நடவடிக்கை கட்சியின் ஒழுங்கு விதிகளுக்கு எதிரானது என்று அவர் குற்றம் சாட்டினார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஈபிஎஸ் A1 (முதல் குற்றவாளி) என்று செங்கோட்டையன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தார். “இபிஎஸ் இது குறித்து மவுனம் ஏன்?” என்று கேள்வி எழுப்பிய அவர், “நான் திமுகவின் B டீம் அல்ல. யார் B டீம் என்பதை நாடு அறியும்” என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து, துரோகத்திற்கு ஒரு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமெனில் அதை தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள், அதிமுகவின் உள் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா தன்னிடம் பேசி கட்சியை வழிநடத்த உதவி கேட்டதாகவும், அதன்படி இபிஎஸ்ஐ முதலமைச்சராக பரிந்துரைத்து, எல்லோரிடமும் ஒப்புதல் பெற்று கடிதம் கொடுத்ததாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார். சசிகலாவிடம் இருந்து இபிஎஸ் முதல்வர் பதவியை எப்படி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதற்காக இரு முறை தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை விட்டுக் கொடுத்ததாகவும் கூறினார். இது அவரது கட்சி விசுவாசத்தை வெளிப்படுத்தியது. தேவர் ஜெயந்தி விழாவிற்கு சென்றபோது, அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்காகவே பேசியதாகவும், தொடர் தோல்விகளால் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அனைவரையும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் செங்கோட்டையன் கூறினார்.

கடந்த 5-ம் தேதி மனம் திறந்து பேசியதற்கு இபிஎஸ் இந்தக் கருத்தை ஏற்காததே காரணம் என்று அவர் தெரிவித்தார். அனைவரையும் ஒன்றிணைக்கும் கருத்தை ஏற்காததால் தான் இந்த நிலை ஏற்பட்டதாகவும், கட்சி ஒற்றுமைக்கான தனது முயற்சிகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் விமர்சித்தார்.முடிவாக, செங்கோட்டையன் அதிமுகவுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டேன் என்று மீண்டும் வலியுறுத்தினார்.