போராட்டத்திற்கு வந்த பலன்...ஓய்வூதிய திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Featured image

சென்னை :தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டுகாலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கும் வகையில் புதிய ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தத் திட்டம் 2003-க்கு முன் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அவர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்கு ஊழியர்களிடம் இருந்து 10% பங்களிப்பு எடுக்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், குடும்ப உறுப்பினர்களுக்கு 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தகுதி பணிக்காலம் 10 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கே ஓய்வூதியம் வழங்கப்படும்.

தகுதி பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறுபவர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதியம் இன்றி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.ஓய்வு பெறும்போது ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை வழங்கப்படும். பணிக்காலத்தில் இறந்துவிட்டால் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை வழங்கப்படும்.

இந்தப் பலன்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும்.இந்தத் திட்டம் 2004-ல் அறிமுகமான புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு (CPS) மாற்றாக அமல்படுத்தப்படுகிறது. CPS திட்டத்தில் ஊழியர்களுக்கு ஓய்வூதிய உறுதி இல்லாத நிலை இருந்தது. அதைத் தீர்க்கும் வகையில் TAPS திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகாலக் கோரிக்கை நிறைவேறியதாக ஊழியர் சங்கங்கள் வரவேற்றுள்ளனர். முதலமைச்சரின் இந்த முடிவு திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவும் அமைந்துள்ளது.