திமுக எம்.பி டி.ஆர் பாலுவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு 3 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு!

மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து திமுக எம்.பி டி.ஆர் பாலு கோரிக்கை வைத்திருந்ததால், தமிழகத்திற்கு 3 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களை திமுக எம்பி டி.ஆர் பாலு அவர்கள் நேற்று சந்தித்து பேசியிருந்தார். அதன் பின்னதாக பேசிய அவர், தடுப்பூசிகளை மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு வழங்கவில்லை எனவும், ரேஷன் கடையில் அரிசி வழங்குவது போல மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு தமிழக மக்களிடம் அதிக அளவில் உள்ளது. ஆனால் தடுப்பூசி தான் இல்லை மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையில் வெளிப்படைத்தன்மையும் இல்லை எனக் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை திமுக எம்பி டி.ஆர் பாலு சந்தித்து தமிழகத்திற்கு தடுப்பூசிகள் வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்பொழுது தமிழகத்திற்கு 3 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.