முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் தேக்கடி மதகுப்பகுதியில் மராமத்து பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில், கேரளா எல்லைக்குள் அமைந்துள்ள தேக்கடி மதகு அடிக்கடி பழுதடைந்து வந்தது. இதையடுத்து மதகின் முழு பராமரிப்பு பணிக்காக தமிழக அரசு 18 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
இந்நிலையில் மதகில் மராமத்து பணிகள் துவக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக மதகின் இரும்பு துருக்களை அகற்ற காப்பர் ஸ்லாக் முறையில் உயர் அழுத்த காற்றில் மணல்துகளோடு காப்பர் கலந்து சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து வண்ணம் பூசும் பணிகள், மதகை மேலுயர்த்தி இறக்கும் சங்கிலிகள் உள்ளிட்டவைகள் மாற்றப்பட உள்ளன. இன்னும் இரண்டு வாரத்தில் பணிகளை முடிக்க திட்டமிட்டிருப்பதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.