அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!
அத்துமீறலே அடக்குமுறையை தகர்க்கும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு “சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு” என்ற பெயரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமனி கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள். மாநாட்டில் வந்த கூட்டம் எந்த அளவுக்கு இருந்தது என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம்.
மாநாடு நடந்து முடிந்து சில நாட்கள் ஆகியும் கூட மாநாடு பற்றி தான் அரசியல் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள். இந்த சூழலில் பாமகவை சீண்டும் வகையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது இது குறித்து பேசிய அவர் ” மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் பேரணி என்று வைப்பார்கள்.
இன்னும் சிலர் மாநில மாநாடு என்று கூட சொல்வார்கள். இல்லையென்றால் முழு நிலவு பெருவிழா என்று வைப்பார்கள். ஆனால், அப்படி வைத்தவர்கள் நடத்திய மாநாட்டில் ஒரு அரசியல் சார்ந்த விஷயங்கள் கூட இல்லை. அந்த நிகழ்வில் பேசிய அணைத்து பேச்சாளர்களுடைய பேச்சை எடுத்து பார்த்தீர்கள் என்றால் ஒரு அரசியல் சார்ந்த விஷயம் கூட இருக்காது. அதில் பேசிய அனைத்துமே அறிவியலுக்கு புறம்பான செய்திகள் தான்.
‘அத்துமீறலே அடக்குமுறையை தகர்க்கும் அடக்குமுறைக்கு உள்ளானவர்களுக்கே அத்துமீறு என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியும்
அமைப்பாக இருந்தால்தான் அத்துமீற முடியும். அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர். அத்துமீறு என்ற சொல்லுக்குள் பல அரசியல் உள்ளது. அது அடிமைத்தனத்தை தகர்க்கும் சொல் எனவும் அன்புமணிக்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கும் வகையில் திருமாவளவன் விமர்சித்து பேசினார்.
பா.ம.க. மாநாட்டில் பேசிய அன்புமணி, நான் மற்ற தலைவர்கள் போல நான் கிடையாது… அத்து மீறு, அதை செய், இதைச் செய் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன் என்பது போல பேசியிருந்தார். அவருடைய பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருமாவளவன் இப்படி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.