“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!
திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியே வருவார்கள் என அதிமுக இலவு காத்த கிளி போல காத்திருக்கிறது என திருமாவளவன் பேசியுள்ளார்.

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்காதது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” அதிமுக இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அவர்கள் விலகி நிற்கிறார்கள். அவர்களே அவர்களுக்கான சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்று தான் கருத வேண்டி இருக்கிறது. பாஜகவின் தயவு வேண்டும் என்பதற்காக பாஜகவின் ஆதரவு வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை மெல்ல மெல்ல அவர்கள் இழந்து வருகிறார்கள்.
அனைவருக்கும் தெரியும் இந்த திமுக அரசு, நீட் விலக்கு மசோதாவை எத்தனை முறை இயற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் என்று . ஒரு மாநில அரசு இதனை தாண்டி என்ன செய்ய முடியும் என்பதை அதிமுகவினர் தான் விளக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் நாங்கள் இருப்பது பற்றி இபிஎஸ் கூறும் கருத்துக்கள் விரக்தியின் வெளிப்பாடு. திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியே வரும் வெளியே வரும் என இலவு காத்த கிளி போல காத்திருந்தார்கள். அவ்வாறு நிகழவில்லை. அந்த விரக்தியின் விளைவாக இம்மாதிரியான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
நீட் தேர்வு எதற்காக கொண்டு வந்தார்களோ அந்த எண்ணம் இப்போது வரையில் நிறைவேறவில்லை. தனியார் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம், நன்கொடை வசூல் தற்போதும் செய்யப்படுகிறது. நீட் கொண்டு வந்ததற்கான காரணம் ஒரு விழுக்காடு கூட நடைபெறவில்லை. அதனை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்கிறார்கள். முன்பு கருப்பில் வாங்கி வந்தார்கள். இப்போது வெள்ளையில் வாங்கி வருகிறார்கள் அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.” என திருமாவளவன் கூறியுள்ளார்.