காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் கண்டனம்!

விஜய் கட்சி பிரமுகரான ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார் என நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

aadhav arjuna vijay rajinikanth

சென்னை :நடிகர் ரஜினிகாந்த், தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தன்னைப் பற்றி வெளியிட்ட கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ஊடகவியலாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் தனது அறிக்கையில், “சமீபத்தில் தவெகவின் திரு. ஆதவ் அர்ஜுனா என்னைப் பற்றி உண்மைக்கு மாறான, அடிப்படையற்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். இது என்னை மிகவும் வருத்தமடையச் செய்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.ஆதவ் அர்ஜுனா, “ரஜினிகாந்த் அரசியலுக்கு வர விரும்பினார், ஆனால் திமுக குடும்பத்தின் மிரட்டலால் வராமல் போனார்” என்று பேசியிருந்தார்.

இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.ரஜினிகாந்த் தனது அறிக்கையில், தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி உள்ளிட்ட பல தலைவர்களுக்கும், திரையுலக நண்பர்களான அமீர், ஜி.தனஞ்சயன், ஊடகவியலாளர்கள் நக்கீரன் கோபால், சாணக்கியா, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இறுதியாக ரஜினிகாந்த், “காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்று குறிப்பிட்டு, “வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்” என்று அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான கோபமும் அதிகரித்துள்ளது. தவெக தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வெளியாகவில்லை. இந்த சர்ச்சை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

unknown node