ஒற்றை எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து நீக்கினார் டிடிவி தினகரன்!

மன்னார்குடி தொகுதி MLA காமராஜ் அமமுகவில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Hero Image

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.இன்று சட்டமன்றத்தில் பேசிய காமராஜ், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு தனது முழு ஆதரவை பகிரங்கமாக அறிவித்தார். இது அமமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கு எதிரான செயல் எனக் கருதிய தினகரன், உடனடியாக காமராஜை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

காமராஜ் தனது உரையில், “நீங்கள் முதல் கையெழுத்திட்ட இந்த மூன்று அறிவிப்புகளும் தமிழ்நாட்டிற்கு நிச்சயமாக உதவுகிற திட்டங்கள். சென்னை இன்றைக்கு எப்படி தெளிவாக, சுத்தமாக, சுகாதாரமாக இருக்கிறது என்பதை நான் வியந்தேன். நீங்கள் நல்லாட்சி தர வேண்டும்.

ஐந்து ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும். இளைஞர்கள் உங்களை நம்புகிறார்கள். உங்கள் அரசு தொடர்வதற்கு என்னுடைய ஆதரவினை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

இந்த உரைக்குப் பிறகு, டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “கட்சியின் நிலைப்பாட்டை மீறி, தவெக அரசை ஆதரித்ததால் காமராஜை கட்சியில் இருந்து நீக்குகிறோம்” என்று தெரிவித்தார்.இந்த நடவடிக்கை அதிமுகவில் ஏற்கெனவே நிலவும் உட்கட்சி பூசலை ஒத்த ஒரு புதிய சர்ச்சையை அமமுகவில் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சிறிய கட்சிகளில் ஏற்பட்டுள்ள இத்தகைய பிளவுகள் தமிழக அரசியல் களத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளன.