தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி நாளை அறிமுகம் – என்.ஆனந்த் அறிவிப்பு.!
பனையூர் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் செயலியை வெளியிடுகிறார்.

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை 30, 2025) காலை 11 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தவுள்ளார். இந்த அறிவிப்பை தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ”தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியை மேற்கொள்ள, உறுப்பினர் சேர்க்கை அணியை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, கடந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, இரண்டு கோடி உறுப்பினர்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்கும் வகையில், நாளை (30.07.2025) காலை 11 மணி அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி அறிமுக நிகழ்வு, நடைபெற உள்ளது’.
மேலும் தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கக்கூடிய 69 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி முகவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் நேரில் சென்றும் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளை மேற்கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
— TVK Party HQ (@TVKPartyHQ) July 29, 2025
இது கட்சியின் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியாகும். இந்த செயலி மூலம் இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் இலக்குடன், 69,000 வாக்குச்சாவடி முகவர்கள் வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கைப் பணியை மேற்கொள்ளவுள்ளனர்.
செயலி மூலம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மற்றும் செல்போன் எண்ணைப் பயன்படுத்தி எளிமையாக உறுப்பினராக இணையலாம். உறுப்பினர் சேர்க்கைக்கு வாட்ஸ்அப், டெலிகிராம், மற்றும் இணையதளம் ஆகியவற்றில் க்யூஆர் குறியீடு மூலம் உடனடியாக இணைய முடியும். 94440 05555 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘TVK’ என்ற குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் சேரலாம்.