விருதுநகர் : பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

நிவாரண நிதி வழங்கப்படும் வரை உடல்களை வாங்கப் போவதில்லை என உயிரிழந்தோரின் குடும்பத்தினர் அறிவிப்பு

Hero Image

விருதுநகர் : அருகே உள்ள கட்டனார்பட்டியில் நேற்று ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த வெடி விபத்தில் மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 18 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் காயமடைந்த 21 பேர் (ஆலைத் தொழிலாளர்கள், தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் காவலர்கள் உட்பட) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பஞ்சவர்ணம் என்ற பெண் சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தோரில் 20 உடல்களுக்கு உடற்கூராய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 4 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. உடற்கூராய்வு பணிக்காக நெல்லை மற்றும் மதுரையிலிருந்து 14 சிறப்பு மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்தோரின் குடும்பத்தினர், நிவாரண நிதி வழங்கப்படும் வரை உடல்களை வாங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் இன்னும் நிவாரண நிதி வழங்குவது குறித்து முடிவெடுக்காத நிலையில், குடும்பத்தினரின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விபத்து நடைபெற்ற இடத்தில் இன்னும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெடி விபத்துக்கான காரணம் குறித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வெடி விபத்து தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கவும், காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.