சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?
இந்த ஒத்திகை குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும் புதுச்சேரியிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. சென்னையில் துறைமுக வளாக கட்டடத்திலும் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையம் அருகேயும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
இதில், தேசிய பேரிடர் மீட்பு படையின் துணை கமாண்டன்ட் திரு வைத்தியலிங்கம் உத்தரவின் பேரில் துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில், சென்னை துறைமுகம் பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் அவசரகால ஒத்திகை பயிற்சியில் பங்கேற்றனர்
இதே போல், சென்னை மணலி மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் நாளை (மே-8) போர்க்கால ஒத்திகை நடைபெறுவதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் ஒத்திகையின்போது, செல்போன் சேவை துண்டிக்கப்பட்டாலோ, குடிநீர், மின் விநியோகம் நிறுத்தப்பட்டாலோ பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். பிற அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதில், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் இந்த ஒத்திகை பயிற்சியினை ஒருங்கிணைக்கும் மற்றும் இதில் மாவட்ட அதிகாரிகள், மாநில அதிரடிப்படை, ஊர்க்காவல் படையினர், சென்னை பெருநகர காவல்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, பாரத சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம், தேசிய சாரணர் இயக்கம், தேசிய சேவை திட்ட தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் – செய்தி வெளியீடு#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @tnsdma pic.twitter.com/kHNL8sk3uI
— TN DIPR (@TNDIPRNEWS) May 7, 2025