அதிமுக கொறடா யார்? சபாநாயகர் கொடுத்த பதில்!

அதிமுக கொறடா நியமன விவகாரம் குறித்த கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுகவில் உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பினர் தொடர்ந்து கலகக் குரல் எழுப்பி வருகின்றனர்.இதனால் அதிமுக இரண்டு அணிகளாக முழுமையாகப் பிளவுபட்டுள்ளது.

ஒருபுறம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும், மறுபுறம் எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் தலைமையிலான அணியும் செயல்பட்டு வருகின்றன. இப்படியான சூழலில், சட்டப்பேரவையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, வேலுமணி-சண்முகம் தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிச்சாமி, தவெக ஆதரவு நிலைப்பாடு எடுத்த 26 எம்.எல்.ஏ.க்களின் கட்சிப் பதவிகளைப் பறித்தார்.

இந்நிலையில், தவெக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கே.பி.முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகையில் மனு அளித்துள்ளனர். மேலும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் கடிதம் கொடுத்தனர்.இதற்கு எதிராக, எடப்பாடி பழனிச்சாமி தரப்பைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த சூழலில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இது குறித்து பேட்டியளித்தபோது, “அதிமுகவினர் இரு தரப்பிலிருந்தும் மனுக்கள் வந்துள்ளன. இரு தரப்பு மனுக்களும் பரிசீலனையில் உள்ளன. விரைவில் முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு கட்சியின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.