சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் மே 2026 மாதத்திற்கான தொகை, வழக்கம்போல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், இந்தத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவைப்படுவதாக நேற்று தெரிவித்திருந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தச் சூழலில், மே மாதத்திற்கான உரிமைத் தொகை எந்தத் தாமதமும் இன்றி வழங்கப்பட்டுள்ளது.
புதிய அரசு பொறுப்பேற்ற உடனேயே, முந்தைய அரசுகளின் நலத்திட்டங்கள் தொடரும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்கனவே உறுதியளித்திருந்தார். அதன்படியே கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் அறிக்கையில் தவெக தலைவர் விஜய், மகளிர் உரிமைத் தொகையை ரூ.1,000லிருந்து ரூ.2,500ஆக உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார். எனவே, திட்டத்தை மறுசீரமைப்பு செய்த பிறகு உரிமைத் தொகை ரூ.2,500ஆக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு கோடியே முப்பத்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெறும் இந்தத் திட்டம், தமிழ்நாட்டில் பல ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு முக்கிய வருமான ஆதாரமாக இருந்து வருகிறது. முதலமைச்சரின் உத்தரவின்படி மே மாதத் தொகை உடனடியாக வழங்கப்பட்டுள்ளதால் பயனாளிகள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளது. மறுசீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, உரிமைத் தொகை உயர்த்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
