தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் உரிமை தொகை திட்டமானது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று முதல் தமிழகம் முழுவதும் துவங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் 3 கட்டங்களாக கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி முதல் முதற்கட்ட விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு பெரும்பாலும் அவை நிரப்பப்பட்டு திரும்ப பெறப்பட்டு வருகின்றன. இன்றுடன் (ஆகஸ்ட் 4) முதற்கட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு விடும் நிலையில், இதுவரை 79 லட்சத்திற்கும் அதிகமாக முதற்கட்டமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் நாளை (ஆகஸ்ட் 5) முதல் விநியோகிக்கப்பட உள்ளது. இந்த விண்ணப்பங்கள் 3 நாள் விநியோகிக்கப்பட்டு அதன் பிறகு வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு திரும்ப பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், நாளை இரண்டாம் கட்ட விண்ணப்ப விநியோகம் உள்ளிட்டவை குறித்து இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அரசு அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
