சென்னை: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தவெக சார்பில் போட்டியிட்ட ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகவும், எம். ரவிசங்கர் துணை சபாநாயகராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சபாநாயகர் தேர்தலுக்குப் பிறகு, மரபுப்படி அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஜே.சி.டி. பிரபாகரை அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.இதனையடுத்து, அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.
அவர் பேசியதாவது“பொன்மணி செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களையும், இதய இதயம் புரட்சித் தலைவர் அம்மா அவர்களையும் முதலில் வணங்கி, வரலாற்று சிறப்புமிக்க இந்த அவையில் புனிதமான எருக்கியில் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு எனது இதய பூர்வமான நல்வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல பேரவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.என்றைக்கு ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பாராமல், என்றைக்கு தாங்கள் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சாயாமல் நடுமையோடு வைக்கும் தராசு போல நீங்கள் என்றும் செயல்பட வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கின்றேன். எந்த அளவுக்கு எதிர்க்கட்சிகளுக்குப் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுடைய அரசு சிறப்பாக செயல்படும்.
ஏனென்றால் மக்களுடைய பிரச்சனையை எடுத்து வைப்பது எதிர்க்கட்சியினுடைய கடமை. ஆகவே எதிர்க்கட்சியினுடைய கடமை சிறப்பாக செயல்படுவதற்கு எதிர்க்கட்சி அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் முழுமையான நேரத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.”எடப்பாடி பழனிசாமி தனது உரையில், புதிய முதலமைச்சர் விஜய்க்கும் வாழ்த்து தெரிவித்தார்.
