நீங்கள் கம்பு சுத்த வேண்டியது பாஜக ஆளும் மாநிலங்களில்தான்! ஆளுநரை விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தின் வளர்ச்சியில் பொறாமை கொண்டு இழிவான அரசியலை செய்கிறார் ஆளுநர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

RN Ravi mk stalin

தருமபுரி :மாவட்டத்தில் ஆகஸ்ட் 17, 2025 அன்று நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். “ஆளுநர் திமுக ஆட்சி மீது அவதூறுகளைப் பரப்பி வருகிறார். தமிழ்நாட்டின் கல்வி, சட்டம்-ஒழுங்கு குறித்து இல்லாதவற்றைப் பேசுகிறார். ஆனால், மத்திய அரசின் புள்ளிவிவரங்களே தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த மாநிலம் என்றும், பள்ளிக் கல்வியில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கின்றன,” என்று கூறினார்.

மேலும், “பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. ஆளுநரைப் பயன்படுத்தி பாஜக இழிவான அரசியல் செய்கிறது,” என்று குற்றம்சாட்டினார். ஆளுநர் அவர்களே.. நீங்கள் கம்பு சுத்த வேண்டியது பாஜக ஆளும் மாநிலங்களில்தான். தமிழ்நாட்டில் இல்ல. அங்க போய் கம்பு சுத்துங்க” எனவும் விமர்சனம் செய்து பேசினார்.

முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளின் நலனை மையப்படுத்தி, உடனடி பயிர்க்கடன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் ஆன்லைனில் விண்ணப்பித்த அன்றே 5 லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். “வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து கடன் பெறலாம். இது காலதாமதத்தையும், தேவையற்ற சிக்கல்களையும் குறைக்கும்,” என்று ஸ்டாலின் விளக்கினார். இந்தத் திட்டம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்திற்கு பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களையும் முதலமைச்சர் அறிவித்தார். ஒகேனக்கல் அருகே 28 கி.மீ. தொலைவு சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும், அரூர் வருவாய் வட்டத்துடன் சித்தேரி பகுதியைச் சேர்ந்த கிராமங்கள் இணைக்கப்படும், நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும், ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்கப்படும், மற்றும் அரூர் நகராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

“தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை கொண்டு வந்தது திமுக ஆட்சியாகும்,” என்று ஸ்டாலின் பெருமையுடன் குறிப்பிட்டார்.நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஆர். காந்தி, மாவட்ட ஆட்சியர் பி. மூர்த்தி, மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். விவசாயிகள், இந்த உடனடி கடன் திட்டத்தை வரவேற்று, “இது எங்களது பயிர் செலவுகளை எளிதாக்கும். ஆன்லைன் முறை மிகவும் எளிமையானது,” என்று தெரிவித்தனர்.

முதல் கட்டமாக, தருமபுரி மாவட்டத்தில் 10,000 விவசாயிகள் இத்திட்டத்தால் பயனடைய உள்ளனர். இந்த விழா, திராவிட மாடல் அரசின் விவசாயிகள் மற்றும் ஊரக மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது. “தமிழ்நாடு, மக்களின் நலனுக்காக உழைக்கும் மாநிலமாக திகழ்கிறது. ஆளுநரின் அவதூறுகளுக்கு மக்களின் ஆதரவே பதிலாக இருக்கும்,” என்று ஸ்டாலின் தனது உரையை முடித்தார்.

நீங்கள் கம்பு சுத்த வேண்டியது பாஜக ஆளும் மாநிலங்களில்தான்! ஆளுநரை விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!