2029 முதல் 200% இறக்குமதி வரி! இந்திய மருந்து நிறுவனங்களுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப்!

அமெரிக்காவில் இறக்குமதியாகும் ஜெனரிக் மருந்துகளுக்கு புதிய வரி திட்டத்தை டிரம்ப் அறிவித்துள்ளார்.

Hero Image

வாஷிங்டன் : அமெரிக்காவின் மருந்துச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் ஜெனரிக் மருந்துகளுக்கான (Generic Drugs) புதிய மற்றும் கட்டம் கட்டமான வரிவிதிப்புக் கொள்கையை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த அதிரடி அறிவிப்பு சர்வதேச அளவில், குறிப்பாக இந்திய மருந்துத் துறை வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, வரும் ஆகஸ்ட் 1, 2026 முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு (2028 வரை) அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் அனைத்து வகையான ஜெனரிக் மருந்துகளுக்கும் சுங்க வரி ஏதுமின்றி 0% வரியே தொடர்ந்து பொருந்தும்.

இரண்டு ஆண்டு கால அவகாசத்திற்குப் பிறகு, 2028 ஆம் ஆண்டு முதல் ஜெனரிக் மருந்துகளுக்கு 100% வரியும், அதனைத் தொடர்ந்து 2029 ஆம் ஆண்டு முதல் 200% வரியும் விதிக்கப்படும். காப்புரிமை பெற்ற மற்றும் பிராண்டட் மருந்துகளின் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மருந்து உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கே மாற்றி அமைக்கும் (Reshore) நோக்கத்திலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட இரண்டு ஆண்டு கால அவகாசத்திற்குள் அமெரிக்காவிற்குள் தங்களது உற்பத்தி ஆலைகளை அமைக்காத நிறுவனங்களுக்கு இந்த உயர்த்தப்பட்ட வரிகள் கடும் தண்டனையாக அமையும் என்று ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தாக்கம் என்ன?

"உலகின் மருந்தகம்" (Pharmacy of the World) என்று வர்ணிக்கப்படும் இந்தியா, அமெரிக்காவின் ஜெனரிக் மருந்துத் தேவையில் பெரும்பங்கு வகிக்கிறது. அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ள மொத்த ஜெனரிக் மருந்துகளில் தோராயமாக 40% இந்தியாவிலிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

புற்றுநோய், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் மனநல பாதிப்புகளுக்கான இந்தியத் தயாரிப்பு ஜெனரிக் மருந்துகள் அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த புதிய வரி உயர்வு கொள்கை இந்திய மருந்து ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் சவாலாகவும் அழுத்தமாகவும் பார்க்கப்படுகிறது.

2029 முதல் 200% இறக்குமதி வரி! இந்திய மருந்து நிறுவனங்களுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப்!