டிரோன் மூலம் வீட்டை தாக்க முயற்சி... புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு!

மோதல் மூலம் ஹமாஸை நிராயுதபாணியாக்க நான் விரும்பவில்லை, ஒப்பந்தத்தை மீறினால் அழிப்பதை தவிர வேறு வழியில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Russia DonaldTrump

வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். ரஷ்யா குற்றம்சாட்டியபடி புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விவாதித்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவம் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்த முயற்சிகளுக்கு இடையில் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் போரை முடிவுக்கு கொண்டுவர தீவிரமாக முயன்று வரும் நிலையில் இந்த தாக்குதல் குற்றச்சாட்டு பேச்சுவார்த்தையை பாதிக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், புதின் வீட்டின் மீது 91 டிரோன்கள் ஏவப்பட்டதாகவும், அனைத்தும் தகர்க்கப்பட்டதாகவும் கூறினார். இது உக்ரைனின் செயல் என்று குற்றம்சாட்டிய அவர், இதனால் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா தனது நிலைப்பாட்டை மாற்றக்கூடும் என்று தெரிவித்தார். ரஷ்யா இதை உக்ரைனின் தூண்டுதல் என்று கூறி பேச்சுவார்த்தையை கடினமாக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளது.

டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிய போது, “புதினிடம் பேசி இந்தச் சம்பவம் குறித்து தெரிந்துகொண்டேன். எனக்கு மிகக் கோபம். நடந்த சம்பவம் எனக்கு பிடிக்கவில்லை. இது நல்லதல்ல” என்று கூறினார். ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர தீவிரமாக முயன்று வரும் டிரம்ப், இந்தச் சம்பவம் பேச்சுவார்த்தையை பாதிக்கலாம் என்று அச்சம் தெரிவித்தார். போரை “இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது” என்று கூறிய அவர், விரைவில் தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, தனது எக்ஸ் பக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்தார். “புதின் வீட்டின் மீதான தாக்குதல் என்பது புனைவுக் கதை. போர் நிறுத்தத்தைத் தடுக்கத்தான் ரஷ்யா இதைச் செய்கிறது. இது ரஷ்யாவின் வழக்கமான பொய்” என்று கூறினார். ரஷ்யா கிய்வ் நகர் மீது தாக்குதல் நடத்திய போதும் உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதே சமயம், ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப், “ஹமாஸ் தானாக முன்வந்து ஆயுதங்களைக் களைய வேண்டும். அப்படி களையவில்லை என்றால் விலையை கொடுக்க வேண்டியிருக்கும். மோதல் மூலம் ஹமாஸை நிராயுதபாணியாக்க நான் விரும்பவில்லை. ஒப்பந்தத்தை மீறினால் அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்தார். ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்த முயற்சிகளுடன் இஸ்ரேல்-ஹமாஸ் பிரச்சனையிலும் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். உலக அமைதி முயற்சிகளில் டிரம்பின் பங்கு கவனத்தை ஈர்த்துள்ளது.