டெல்லி :சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன்று (ஆகஸ்ட் 18, 2025) இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் ஆகியோரைச் சந்திப்பார்.
குறிப்பாக, இந்திய-சீன எல்லைப் பிரச்சனைகள் குறித்த 24-ஆவது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சந்திக்கவுள்ளார். இந்தப் பயணம், எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது, அமெரிக்காவின் வரிவிதிப்பு உள்ளிட்ட பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்க முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
கிழக்கு லடாக்கில் 2020-இல் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் பதற்றத்தைக் குறைத்து, டெம்சோக், டெப்சாங் பகுதிகளில் படைகளை வாபஸ் பெற்றன. இந்தப் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவதற்கும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டிற்கு முன்னோட்டமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
