சென்னை :தென்மேற்கு வங்ககடலில் உருவான டிட்வா (Ditwah) புயலின் கனமழை மற்றும் வலுவான காற்றால் இலங்கைத் தீவு முழுவதும் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர், 130 பேர் காணாமல் போயுள்ளனர் என்று இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் (DMC) அறிவித்துள்ளது. புயல் நவம்பர் 26 அன்று கிழக்குக் கரையைத் தொட்டதிலிருந்து, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் 300 மி.மீ.க்கும் மேல் மழை பெய்து, நிலச்சரிவுகள், வெள்ளம் ஏற்பட்டுள்ளன.
இது 2017-ல் 200-க்கும் மேற்பட்டோர் இறந்த வெள்ளத்திற்குப் பின் மிக மோசமான வானிலை சம்பவமாக அமைந்துள்ளது.ரம்பொடகல்ல பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் உயிரிழந்துள்ளனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொத்மலையில் சுமார் 4 கி.மீ. பரப்பளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய டீ பயிரிடும் பகுதிகளான படுல்லா, நுவர எலியா போன்ற இடங்களில் நிலச்சரிவுகள் அதிகம் ஏற்பட்டுள்ளன, அங்கு 30-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
44,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலைகள் மூழ்கி, மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.இந்தப் புயலால் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு விமான நிலையத்தில் இந்திய தூதரகம் உதவி மையம் அமைத்துள்ளது. இந்தியர்கள் +94 773727832 என்ற அவசர எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியா ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற திட்டத்தின் கீழ் 80 பேர் கொண்ட NDRF குழுவை 21 டன் நிவாரண பொருட்களுடன் (உணவு, மருந்துகள், மீட்பு உபகரணங்கள்) இலங்கை அனுப்பியுள்ளது. இந்திய விமானப்படை Il-76 மற்றும் C-130J விமானங்கள் மூலம் உதவி அனுப்பப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “இலங்கை மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபம். இந்தியா உதவியைத் தொடரும்” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
புயல் தற்போது வடமேற்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி வருவதால், இலங்கையில் மழை குறைந்தாலும், வடக்குப் பகுதிகளில் கனமழை தொடரலாம் என்று DMC எச்சரித்துள்ளது. இராணுவம், காவல் துறை மூலம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இந்தியாவின் உதவி இலங்கைக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
