ஈரான், லெபனான் மீதான இஸ்ரேலின் போருக்கு எவ்வளவு கோடி செலவு தெரியுமா?

ஈரான், லெபனான் மீதான இஸ்ரேலின் 40 நாள் போரில் $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) செலவானதாக இஸ்ரேல் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Hero Image

இஸ்ரேல் : ஈரான் மற்றும் லெபனான் மீது கடந்த 40 நாட்களாக நடத்திய தீவிர இராணுவ நடவடிக்கைகளுக்காக 17.5 பில்லியன் அமெரிக்க டாலர் (ஏறத்தாழ ரூ.1.6 லட்சம் கோடி) செலவு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வமாக மதிப்பீடு செய்துள்ளது.

இஸ்ரேல் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த 40 நாள் போரில் மொத்த செலவில் 12.9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.18 லட்சம் கோடி) ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான செலவுகளுக்காகவும், 4.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.41,000 கோடி) ஈரானிய தாக்குதல்களால் ஏற்பட்ட நேரடி சேதங்களுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டில், போரால் ஏற்பட்ட மறுசீரமைப்புச் செலவுகள், பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியதால் ஏற்பட்ட இழப்புகள், வணிக நஷ்டங்கள், சுற்றுலாத் துறை பாதிப்பு மற்றும் மனித வள இழப்புகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. எனவே உண்மையான மொத்த செலவு இன்னும் அதிகமாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இஸ்ரேல் நிதியமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், போர் தொடர்பான செலவுகள் இஸ்ரேல் பொருளாதாரத்துக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது. குறிப்பாக, இராணுவ நடவடிக்கைகளுக்காக மட்டும் செலவிடப்பட்ட 12.9 பில்லியன் டாலர், இஸ்ரேல் வரலாற்றில் ஒரே ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய இராணுவ செலவாகும்.

இந்தப் போர், ஈரான் மற்றும் லெபனான் மீதான தாக்குதல்களுடன் தொடங்கி, ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஈரான் ஆதரவு அமைப்புகளுக்கு எதிராக விரிவடைந்தது. இஸ்ரேல் தரப்பில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில் இந்த செலவு மதிப்பீடு வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் அரசு இந்தச் செலவுகளை ஈடுகட்ட பல்வேறு நிதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் பொருளாதாரத்தில் அழுத்தம் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.ஒட்டுமொத்தமாக, இந்த 40 நாள் போர் இஸ்ரேலுக்கு இராணுவ ரீதியாக மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது.