உக்ரனை அடுத்து ஈரான்? அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட வேண்டும். இல்லையென்றால்? டிரம்ப் எச்சரிக்கை!
ஈரான், அமரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுப்போம் என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற நாடுகளுடன் நட்புறவு என்பதை பொருட்படுத்தாமல் அமெரிக்கா , அமெரிக்க மக்களின் நலன், அமெரிக்காவே உலக நாடுகளின் தலைமை என்ற விதத்தில் பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
உக்ரைன் உடன்..,
முன்னதாக உக்ரைன் நாட்டுடன் கனிம வள ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி , உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடனான பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி அதில் உடன்பாடு இல்லாமல் ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தையில் இருந்து பாதியில் கோபத்துடன் வெளியேறினார். அதன் பிறகு உக்ரைனுக்கான அமெரிக்க ராணுவ உதவிகளை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்த பிறகு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மன்னிப்பு கேட்டு, அமெரிக்காவுடனான கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அறிவித்தார்.
அடுத்து ஈரான்?
அதே போல ஒரு சம்பவத்தை மீண்டும் நடத்த டிரம்ப் முயற்சித்து வருகிறார். இந்த முறை டிரம்ப் குறிவைத்தது ஈரானுடன். கடந்த முறை டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற சமயத்தில் அதற்கு முன்னர் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, ஈரானுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். மேலும் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
ஈரானைக் கையாள இரண்டு வழிகள்..,
தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள டிரம்ப் அதேபோல ஒரு நடவடிக்கையை மேற்கொள்கிறார். இந்த முறை உக்ரைன் மீது பயன்படுத்திய அதே யுக்தியை கையாண்டுள்ளார். டிரம்ப் கடந்த வாரம் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், ஈரான் நாட்டு தலைவர் கமேனிக்கு ஒரு கடிதம் எழுதியதாகக் கூறினார், “ஈரானைக் கையாள இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இராணுவ ரீதியாக கையாள வேண்டும். மற்றொன்று இருநாட்டு ஒப்பந்தம் போட வேண்டும். நான் ஒரு ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன். ஏனென்றால் நான் ஈரானுக்கு தீங்கு செய்ய விரும்பவில்லை.” என்று குறிப்பிட்டார்.
அதாவது, “அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் தலைவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று நம்புகிறேன். ஏனென்றால், அது ஈரானுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். அவர்கள் நான் எழுதிய கடிதத்தைப் பெற விரும்புகிறார்கள் என்றே நினைக்கிறேன். மாற்று வழி என்னவென்றால், நாங்கள் வேறு வகையில் ஏதேனும் செய்ய வேண்டும், ஏனென்றால் ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது ” என்று ஈரானுக்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தார் டொனால்ட் டிரம்ப்.
ஈரான் கண்டிப்பாக ஏற்காது
ஆனால், ஈரான் அதற்கு சற்றும் வளைந்து கொடுக்கவில்லை. ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி அண்மையில் பேசுகையில், அமெரிக்காவின் பெயரை குறிப்பிடாமல், ” சில ‘கொடுமை’ நாடுகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றன. ஆனால் அவை பிரச்சினைகளைத் தீர்ப்பதாக தெரியவில்லை. மாறாக தங்கள் எதிர்பார்ப்புகளை மற்ற நாடுகளிடம் திணிக்க வேண்டும் என்பதாக மட்டுமே உள்ளது.” என்று கமேனி கூறினார். மேலும், அப்படியான நாடுகளின் கோரிக்கைகளை ஈரான் இஸ்லாமிய குடியரசு கண்டிப்பாக ஏற்காது என்றும் திட்டவட்டமாக கூறினார்.