இயல்பை விட எகிறப்போகும் உலக வெப்பநிலை! மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்த வரும் 'எல் நினோ'!

வரும் செப்டம்பர் மாதத்திற்குள் எல் நினோ உருவாக 80 சதவீதமும், நவம்பர் மாதத்திற்குள் உருவாக 90 சதவீதமும் வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

Hero Image

உலகம் முழுவதும் கடுமையான வெப்பம், கனமழை, வறட்சி உள்ளிட்ட தீவிர வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் எல் நினோ (El Niño) பருவநிலை நிகழ்வு மீண்டும் உருவாகும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செப்டம்பர் மாதத்திற்குள் எல் நினோ உருவாகும் வாய்ப்பு 80 சதவீதமும், நவம்பர் மாதத்திற்குள் உருவாகும் வாய்ப்பு 90 சதவீதமும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான மாதிரிகள், இந்த முறை உருவாகும் எல் நினோ குறைந்தபட்சம் மிதமான தாக்கத்தையாவது ஏற்படுத்தும் என்றும், சில கணிப்புகள் அது மிகவும் வலுவாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கின்றன.

கடந்த 2023-24 காலகட்டத்தில் ஏற்பட்ட எல் நினோ, வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஐந்து நிகழ்வுகளில் ஒன்றாக பதிவாகியது. அதன் தாக்கம் காரணமாக 2024 ஆம் ஆண்டு உலக வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியது. உலகின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகள், வறட்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் விவசாய பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்த நிலையில், மீண்டும் எல் நினோ உருவாகும் வாய்ப்பு இருப்பதால் உலக நாடுகள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார். "ஏற்கனவே வெப்பமடைந்து வரும் உலகிற்கு எல் நினோ மேலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். அதன் விளைவுகள் அதிகமாகவும், வேகமாகவும் உலக நாடுகளை தாக்கக்கூடும். எனவே இதை மிக முக்கியமான பருவநிலை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக எல் நினோ உருவாகும் காலங்களில் தென் அமெரிக்கா, அமெரிக்காவின் தெற்கு பகுதிகள், ஆப்பிரிக்காவின் சில நாடுகள் மற்றும் மத்திய ஆசியாவில் அதிக மழை பெய்யும். அதே நேரத்தில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, கரீபியன் தீவுகள் மற்றும் தெற்காசியாவின் சில பகுதிகளில் வறட்சி நிலை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

உலக வானிலை அமைப்பு மேலும் கூறுகையில், அடுத்த மூன்று மாதங்களில் உலகின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் சில பகுதிகளில் கடுமையான மழையும், சில பகுதிகளில் கடுமையான வறட்சியும் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளது.

காலநிலை மாற்றம் ஏற்கனவே உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் நிலையில், எல் நினோ மீண்டும் உருவாகும் சாத்தியம் உணவு உற்பத்தி, குடிநீர் வளம், விவசாயம் மற்றும் பொருளாதாரத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் உலக நாடுகள் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பேரிடர் மேலாண்மை மற்றும் முன் எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று ஐ.நா. மற்றும் உலக வானிலை அமைப்பு வலியுறுத்தியுள்ளன.