கேரளாவையே உலுக்கிய சிறுவன் கொலை : கைதான காதலன் அஷ்கரின் நெஞ்சை பதறவைக்கும் வாக்குமூலம்!

குழந்தையின் உடலில் 91 காயங்கள் மற்றும் 7 இடங்களில் விலா எலும்புகள் உடைந்திருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Hero Image

கேரள : மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஒன்றரை வயது குழந்தை கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குழந்தையின் தாய் அகிலா மற்றும் அவரது காதலன் அஷ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுமங்காடு அருகே உள்ள பனவூர் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், ஒன்றரை வயது சிறுவன் அர்ஷித் உயிரிழந்தான். ஆரம்பத்தில் குழந்தை உணவு தொண்டையில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வில் வெளிவந்த தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

உடற்கூறு ஆய்வறிக்கையின்படி, குழந்தையின் உடலில் மொத்தம் 91 காயங்கள் இருந்துள்ளன. மேலும் விலா எலும்புகள் 7 இடங்களில் முறிந்திருந்ததுடன், மூளை மற்றும் மார்பு பகுதியில் கடுமையான ரத்தக்கசிவும் ஏற்பட்டிருந்தது. இதுவே குழந்தையின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில், குழந்தையின் மார்பில் ஏறி மிதித்ததால் உள் உறுப்புகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், குழந்தையின் கால்கள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் சிகரெட் லைட்டர் மூலம் சூடு வைக்கப்பட்ட காயங்களும் இருந்ததாக உடற்கூறு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குழந்தை தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தையின் இரண்டு கைகளிலும் ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த நிலையில், அதற்கு காரணம் சைக்கிளில் இருந்து விழுந்தது என தாய் கூறியிருந்தார். ஆனால் தற்போது அவையும் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் என்பது தெரியவந்துள்ளது.

விசாரணையின்போது, தனது காதல் உறவுக்கு குழந்தை தடையாக இருந்ததாக அஷ்கர் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குழந்தையை வெறுப்புடன் பார்த்த அவர், தொடர்ந்து தாக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

குழந்தை மீதான கொடுமைகள் குறித்து தெரிந்திருந்தும் அதை தடுக்கவோ, காவல்துறைக்கு தெரிவிக்கவோ தவறியதாக தாய் அகிலா மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியானதும், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஆதாரங்களை சேகரிப்பதற்காக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் அழைத்து சென்றபோது, பொதுமக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். நிலைமை பதற்றமாக மாறியதால் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினர்.

கேரளாவையே உலுக்கிய சிறுவன் கொலை : கைதான காதலன் அஷ்கரின் நெஞ்சை பதறவைக்கும் வாக்குமூலம்!