ஈரான் எண்ணெய் தளங்கள் மீது தாக்குதல் இல்லை – டிரம்ப் முக்கிய அறிவிப்பு!

ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு கிடங்கு மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

donald trump angry

வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் எண்ணெய் நிறுவனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். “இஸ்ரேல் எதிர்காலத்தில் ஈரானின் எண்ணெய் தளங்கள் மீது தாக்குதல் நடத்தாது” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தெற்கு பார்ஸ் எரிவாயு கிடங்கு மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்காவுக்கோ, கத்தாருக்கோ எந்த தொடர்பும் இல்லை. இஸ்ரேலின் இந்த தாக்குதல் குறித்து எங்களுக்கு முன்கூட்டியே எதுவும் தெரிவிக்கப்படவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் கத்தாரில் உள்ள மிகப்பெரிய LPG ஆலையை தாக்கியுள்ளது. இந்நிலையில் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஈரான் மீண்டும் கத்தார் மீது தாக்குதல் நடத்தினால், தெற்கு பார்ஸ் எரிவாயு கிடங்கு முழுவதையும் அமெரிக்கா அழித்துவிடும்” என்று அவர் மிரட்டியுள்ளார்.

டிரம்ப் மேலும் கூறியதாவது, “இஸ்ரேல் தாக்குதலை நிறுத்திய பிறகு ஈரான் தாக்குதல் நடத்தினால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது எங்களுக்கு தேவையில்லை. ஆனால் ஈரான் தவறான முடிவெடுத்தால் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்துள்ளார்.

இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு பதற்றத்தை சற்று குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு சந்தையில் சிறு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், ஈரான் தரப்பில் இதற்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை. இஸ்ரேல் தரப்பும் இந்த அறிவிப்புக்கு எதிர்வினை தெரிவிக்கவில்லை. இந்த சூழலில், பிராந்தியத்தில் அமைதி திரும்புமா அல்லது பதற்றம் மேலும் அதிகரிக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும். தமிழகத்தில் எல்பிஜி தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வு இந்த மோதலின் நேரடி எதிரொலியாகத் தொடர்ந்து வருகிறது