அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல் விளைவு – ஈரானுக்கு எவ்வளவு நஷ்டம்?

அமெரிக்கா-இஸ்ரேல் தொடுத்தப் போரால் ஈரானில் ரூ.25 லட்சம் கோடி அளவுக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

Hero Image

டெஹ்ரான்: அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி தொடுத்த 40 நாள் போரால் ஈரான் நாட்டுக்கு ரூ.25 லட்சம் கோடி அளவுக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட மதிப்பீடு வெளியாகியுள்ளது. ஈரான் அரசு வெளியிட்டுள்ள இந்த முதற்கட்ட அறிக்கையின்படி, போர் காரணமாக ஏற்பட்ட உடைமை சேதங்கள், உள்கட்டமைப்பு அழிவு, பொருளாதார இழப்பு மற்றும் எண்ணெய், எரிவாயு உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்டவை இந்த மதிப்பீட்டில் அடங்கும்.

இறுதிக் கணக்கெடுப்பு முடிவடையும் போது இழப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று ஈரான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தப் போரால் ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் இழப்பீடுகளைப் பெறுவது அமெரிக்காவுடன் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தையின் முக்கியப் பகுதியாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு கோரவும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.இந்தப் போரால் ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள், பாலங்கள், மின்சார நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பெரும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.

இதனால் ஈரான் பொருளாதாரம் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது.இருப்பினும், ஈரான் அரசு தற்போது அமெரிக்காவுடன் இரு வார அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், இழப்பீடு பெறும் விவகாரத்தை முக்கியப் பேச்சு தலைப்பாக முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் அதிகாரிகள், “இழப்புகளை ஈடுகட்டாமல் எந்த ஒப்பந்தத்துக்கும் ஒப்புக்கொள்ள மாட்டோம்” என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளனர்.