என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!
இந்தியா - பாக். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. போர் நிறுத்தம் செய்யப்பட்டது முதல் அதற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் முதல் ஆளாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்திருந்தார்.
எனவே, இந்தியா VS பாகிஸ்தான் போர் நிறுத்தம் ட்ரம்ப் எதற்காக அறிவித்தார் என்கிற கேள்விகளும் எழுந்தது. இந்த சூழலில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முக்கியமான விஷயத்தை பற்றி பேசியுள்ளார். சவூதி அரேபியாவில் நடந்த சவூதி-அமெரிக்க முதலீட்டு மாநாட்டில் (Saudi-America Investment Forum) கலந்து கொண்டு பேசிய டொனால்ட் ட்ரம்ப் ” நான் இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் ஒரு விஷயத்தை சொன்னேன்.
அது என்னவென்றால், ‘நண்பர்களே, வாருங்கள் ஒரு ஒப்பந்தம் செய்வோம், சிறிது வணிகம் செய்வோம். அணு ஏவுகணைகளை விற்காமல், நீங்கள் அழகாக உருவாக்கும் பொருட்களை வணிகமாக்குவோம்’ என்று கூறினேன். அதன் பிறகு தான் அவர்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டார்கள்.
இந்த மோதல் நிறுத்தப்பட்டு, இனி இப்படியே தொடரும் என நம்புகிறேன். இந்த மோதல் சிறிய அளவில் தொடங்கி பெரிதாக வளர்ந்து, இலட்சக்கணக்கான மக்களை கொல்லக்கூடியதாக இருந்தது. நான் போரை விரும்பவில்லை. சில நாட்களுக்கு முன்பு, எனது நிர்வாகம் இந்தியா-பாகிஸ்தான் இடையே வளர்ந்து வந்த வன்முறையை தடுக்க வரலாற்று சிறப்புமிக்க போர் நிறுத்தத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தியது. நான் அதற்கு வணிகத்தை பெருமளவு பயன்படுத்தினேன்” என கூறியுள்ளார்.
ஏற்கனவே, நேற்று மோதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டேன் எனக் கூறி இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாகவும் தகவல்கள் பரவியது.
அதற்கு மறுப்பு தெரிவித்து ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய பின்னர் அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் இந்திய பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் வர்த்தகம் குறித்து எந்த விவாதமும் இல்லை எனவும் திட்டவட்டமாக மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து விளக்கம் அளித்ததாகவும் தகவல்கள் பரவியது. அப்படி இருந்தும் தொடர்ச்சியாக ட்ரம்ப் தான் சொன்ன காரணத்தால் தான் போர் நின்றதாக தெரிவித்து கொண்டு இருக்கிறார்.