பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்க தாக்குதல்.. யுரேனியம் ஒப்படைக்க டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதலுக்கு ஈரான் இன்னும் அதிகாரப்பூர்வ பதில் அளிக்கவில்லை. இந்த புதிய தாக்குதல், நடைபெற்று வந்த அமைதி பேச்சுவார்த்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Hero Image

வாஷிங்டன் : அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தெற்கு ஈரானில் உள்ள முக்கிய கடற்படை தளமான பந்தர் அப்பாஸ் பகுதியை அமெரிக்க ராணுவம் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து, ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூன்று மாதங்களாக நீடித்து வரும் அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் மோதலுக்கு முடிவு காணும் வகையில் கத்தார் தலைநகர் தோஹாவில் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்த சூழலில், இந்த புதிய தாக்குதல் நடந்துள்ளது.

அமெரிக்க மத்திய ராணுவ கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, “அமெரிக்க படைகளை பாதுகாக்கும் தற்காப்பு நடவடிக்கையாகவே தாக்குதல் நடத்தப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கடற்பகுதியில் கண்ணிவெடிகள் அமைக்க முயன்ற படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் பந்தர் அப்பாஸ் அருகே நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோர்முஸ் கடல்சந்திக்கு அருகில் அமைந்துள்ள இந்த பகுதி, ஈரானின் முக்கிய கடற்படை மற்றும் விமானப்படை தளமாக கருதப்படுகிறது.

இதற்கிடையில், பந்தர் அப்பாஸ் விமான நிலையம் அருகே வெடிப்பு சத்தம் கேட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்பகுதியில் எதிரி இலக்குகளை தடுக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் அளிக்கவில்லை. இருப்பினும், ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட முகமது பகர் சொல்காதர், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் எந்த பின்வாங்கலும் இருக்காது” என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், “ஈரான் வைத்துள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் உடனடியாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இல்லையெனில் சர்வதேச கண்காணிப்புடன் அதை அழிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகள், இஸ்ரேலுடன் உறவை சாதாரணப்படுத்தும் ‘ஆபிரகாம் ஒப்பந்தத்தில்’ இணைவது அவசியம் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.ஆனால், பாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு இல்லாமல் இஸ்ரேலுடன் உறவை சாதாரணப்படுத்த முடியாது என்ற நிலைப்பாட்டில் பல வளைகுடா நாடுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது