கர்நாடக தேர்தல் இறுதி நிலவரத்தின் படி 135 தொகுதிகளில் காங்கிரசும் 66 தொகுதிகளில் பாஜகவும் வெற்றிபெற்றுள்ளது.
கடந்த 10ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு 36 மையங்களில் தொடங்கியது. இதில் முதலில் தபால் ஓட்டுகள், வயதானோர் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் பாஜக காங்கிரஸ் சமநிலை வகித்து சிறு வித்தியாசத்தில் இருந்தனர்.
அதன்பிறகு நடந்த வாக்கு எண்ணிக்கை சுற்றுகளில் ஆளும் பாஜகவுக்கு தொடர் இறங்குமுகமாக தான் இருந்தது. காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. பெரும்பான்மைக்கு தேவையான 113ஐயும் தாண்டி காங்கிரஸ் சென்று கொண்டிருந்தது.
இறுதியாக வெற்றிகள் அறிவிக்கப்பட்ட வகையில், காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றிபெற்று கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. போல ஆளும் பாஜக 65 தொகுதிகளை மட்டுமே வென்று இருந்தது. இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என் கூறப்பட்ட மதசரப்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளை மட்டுமே வென்றது. சுயேட்சைகள் 2 தொகுதிகளை கைப்பற்றியுள்ளனர். பிற கட்சியினர் 2 தொகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.
ஒரு தொகுதியில் மட்டும் நள்ளிரவு வரை ஒட்டு எண்ணிக்கை தொடர்ந்தது. ஜெயா நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. முதலில் 294 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பாஜக வேட்பாளர் வேண்டுகோளுக்கு இணங்க மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த தொகுதியில் மட்டும் மிகவும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
ஜெயாநகர் தொகுதியையும் சேர்த்தால் பாஜக வென்ற தொகுதி எண்ணிக்கை 66ஆக உள்ளது.
