பெங்களூருவில் நடைபெறவுள்ள காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அரவிந்த் கெஜிரிவால் பங்கேற்க்க உள்ளார்.
டெல்லியில் காவல்துறை, பொது அமைதி, நிலம் தொடர்பான விவகாரங்களை தவிர இதர துறைகள் சார்ந்த விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தை டெல்லி மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்றி, டெல்லி மாநில அரசை விட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த அவசர சட்டதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் தொடர்ந்து மௌனம் சாதித்து வந்தது. இதனால் பெங்களூருவில் இன்று காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் எதிர்கட்சிகள் இரண்டு நாள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்து வந்தது.
இந்நிலையில் நேற்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் டெல்லி அவசர சட்ட மசோதாவிற்கு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கும் என தெரிவித்த நிலையில் இன்று தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு செல்லஉள்ளது உறுதியாகியுள்ளது.
