பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருப்பு கொடி, கருப்பு பலூன் ஆகியவற்றை பறக்கவிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரவுள்ளார். இன்று சென்னையில் வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம், சென்னை விமான நிலைய புதிய முனையம் ஆகியவற்றை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.
பிரதமர் வருகை :
பிரதமரின் தமிழக வருகையை ஒட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடி செல்லும் இடங்களில் கருப்பு கொடி காட்டுவதற்கு முடிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் எதிர்ப்பு :
ராகுல்காந்தியின் எம்பி பதவி தகுதிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி போராட்டம் நடத்தவுள்ளனர். இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கருப்பு கொடி – பலூன் :
அதில் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் GoBackModi என்ற வசனம் அடங்கிய கருப்பு நிற பலூன்களை பறக்கவிடவும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார் .
வீட்டுக்காவல் :
சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பலூனை பறக்க விடுவதை அறிந்த காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து , காங்கிரஸ் கட்சியினர் வெளியில் செல்ல முடியாத படி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.