டெல்லி நிர்வாக மசோதாவுக்கு திமுக கடும் எதிர்ப்பு!

டெல்லியில் மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம், பணியிட மாற்றம் செய்வது தொடர்பான அதிகாரங்களை ஆளுநருக்கு வழங்கும் டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றான

Delhi Services Bill

டெல்லியில் மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம், பணியிட மாற்றம் செய்வது தொடர்பான அதிகாரங்களை ஆளுநருக்கு வழங்கும் டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றான மசோதா இரு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அவசர சட்டத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட டெல்லி சேவைகள் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இந்த சர்ச்சைக்குரிய மசோதா, டெல்லியின் அதிகாரத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் மூலம் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு ஆதரவான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் உள்ளது. டெல்லியில் துறைகள் சார்ந்த விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் டெல்லி மாநில அரசுக்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை இன்று மக்களவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகப்படுத்தினார். மக்களவையில் 9 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. டெல்லி அரசு அதிகாரிகள் நியமன சட்டம் தொடர்பாக மக்களவையில் காரச்சார விவாதம் நடைபெற்று வருகிறது.

டெல்லி அரசில் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடந்து வரும் நிலையில், இம்மசோதாவுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அப்போது, பேசிய திமுக எம்.பி தயாநிதி மாறன், இம்மசோதா உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது எனவும் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், அமலாக்கத்துறை, சிபிஐயை எல்லாம் உங்கள் கூட்டணி கட்சிகளாக சேர்த்து வைத்துள்ளீர்கள். I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு விசாரணை அமைப்புகள், தற்போது போன்று தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது. அடுத்த ஆண்டு நீங்கள் எதிர்க்கட்சியாக இருப்பீர்கள், நாங்கள் ஆளும் கட்சியாக இருப்போம். அப்போது, மணிப்பூர் விவகாரம் பற்றி நாங்கள் பேசும்போது பிரதமர் அவையில் இருக்க வேண்டும் என்று காரசாரமாக பேசியிருக்கிறார்.