இந்தாண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி துவங்கியது. நேற்றுடன் 16 நாள் நிறைவு பெற்று இன்று (ஆகஸ்ட் 11) 17வது நாளுடன் நிறைவு பெற உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய நாள் முதல் , மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், விரிவான விவாதத்திற்கு கடைசி வரையில் நாடளுமன்ற இரு சபை தலைவர்களும் அனுமதி அளிக்கவில்லை.
இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தனர். அந்த தீர்மானம் மீதான விவாதம் கடந்த 8ஆம் தேதி தொடங்கி,ராகுல்காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் கருத்துக்கள் தெரிவித்து, நேற்று பிரதமர் மோடி பதிலுரையுடன் நிறைவு பெற்றது.
அதனை அடுத்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பை அடுத்து, நம்பிக்கை இல்லா தீர்மானம் குரல்வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இவ்வாறு பல்வேறு பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் அரங்கேறிய நிலையில் இன்றுடன் இந்த மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெற உள்ளது.
