கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிலக்கரி சுரங்கத்தின் இரண்டாம் கட்ட சுரங்கத்திற்காக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிலத்தை கையக்கப்படுத்தும் பணி அண்மையில் மேல்வலையமாதேவி விளைநிலங்களில் நடைபெற்றது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் உருவாகின.
அரசியல் கட்சியினர் என்எல்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கடந்த 28ஆம் தேதி பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் என்எல்சி முற்றுகை போராட்டத்தை நடத்தினார். அப்போது அந்த ஆர்ப்பாட்டத்தின் போது கல்வீச்சு சம்பவங்களும், வன்முறை சம்பவங்களும் நடந்தன. இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதில் வன்முறையில் ஈடுபாட்டோர் மீது வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி என்எல்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இதற்கான அனுமதி கேட்டு அவர் காவல்துறையை அணுகி இருந்தார்.
ஆனால் ஏற்கனவே நடந்த வன்முறை சம்பவங்களை சுட்டிக்காட்டி, இம்முறை ஆகஸ்ட் 5ஆம் தேதி என்எல்சி அருகே நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
