செந்தில் பாலாஜியை அமைச்சரவரவையில் இருந்து நீக்கிய ஆளுநர் ரவியின் உத்தரவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் மீதான நீதிமன்ற காவலை வரும் ஜூலை 12வரையில் நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சையில் இருப்பதால் அவர் வகித்து வந்த அமைச்சர் பொறுப்புகள் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு , செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு ஆரம்பம் முதலே அதிருப்தியில் இருந்தது.
இந்நிலையில் தான் நேற்று அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார். வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி உள்ளிட்ட குற்றவழக்குகளை எதிர் கொண்டுள்ளார்.
செந்தில் பாலாஜி மீது ஊழல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையில் அமைச்சர் பதவியில் செந்தில் அவர் தொடர்ந்தால் அமலாக்கத்துறை விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்குவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஆளுனரின் இந்த அறிவிப்புக்கு நேற்று முதலே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , திமுக கூட்டணி கட்சியினர் என பல அரசியல் தலைவர்களும் தங்கள் கண்டனங்களையும் கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் :
அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. செந்தில் பாலாஜியை நீக்கிய அறிவிப்பு குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கைகளை எடுப்போம்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி :
அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் ரவி சட்டம் தெரியாமல்இதில் மாட்டிக்கொள்ள போகிறார். ஏற்க்னவே உச்சநீதிமன்றம் 2 மாநில ஆளுநர்களை கண்டித்துள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன் :
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் நடவடிக்கை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரானதல்ல. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சீண்டி வம்புக்கிழுக்கிற சேட்டையாகும். இது பிரதமர் மோடி மாறும் அமித்ஷா ஆகியோரின் செயல்திட்டமாகும்.
ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கான வேலைத் திட்டத்தையும் அவர்களே தீர்மானிக்கின்றனர். இதன் மூலம் பாஜக எதிர்ப்பு நிலையிலிருந்து எதிர்க் கட்சிகளைத் திசைதிருப்பும் சதிமுயற்சியே ஆகும்.
மதுரை CPI(M) எம்.பி சு.வெங்கடேசன் :
அமைச்சரின் நியமனமும், நீக்கமும் முதல்வரின் அதிகாரம். ஆளுநரே, உங்கள் அதிகாரம் எவ்வளவு தூரம் செல்லலாம் என்பதற்காக அரசியல் சாசனம் கிழித்துள்ள கோட்டை மீறாதீர். அத்து மீறலை தமிழ்நாடு அனுமதிக்காது.
இந்நிலையில் பல்வேறு தரப்புகளில் இருந்து வந்த எதிர்ப்புகளை தொடர்ந்து, தற்போது அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் அறிவிப்பை ஆளுநர் ரவி தரப்பு நிறுத்தி வைத்துள்ளதாகவும், இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
