ஜிஎஸ்டி மசோதாவை ஆதரித்தது நமது தவறு. அதனால் மாநிலங்கள் பலனடையும் என்று நான் நினைத்தேன். ஆனால், மத்திய அரசு அனைத்து வரிகளையும் வசூலித்து, அதில் பங்கை எங்களுக்குத் தரவில்லை என்று பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, எந்த மத்திய உதவியும் இல்லாமல் மாநிலத்தில் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் கொண்டு வர வேண்டும் என்ற உறுதியுடன், பாடஸ்ரீ, ரஸ்தாஸ்ரீ திட்டத்தை சிங்கூரில் உள்ள ரத்தன்பூரில் இன்று தொடங்கி வைத்தார்.
அம்மாநில பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா, பாஜக தலைமையிலான மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டம், ஓபிசி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காளத்திற்கு விடுவிக்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காமல் இருப்பதற்கு, மத்திய அரசை கண்டித்து கொல்கத்தாவில் இன்றும், நாளையும் தர்ணா போராட்டத்தைத் தொடக்கியுள்ளார். இந்த போராட்டத்தில், திட்டம் மற்றும் வீட்டுவசதி மற்றும் சாலைத் துறைகளின் மத்திய அரசு நிதியை விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கையை வைக்கவுள்ளார்.