தினமும் 8 மணி நேரப் பயிற்சி, 600 பந்துகள்! உலகத்தரம் வாய்ந்த பேட்டராக வைபவ் மாறியது எப்படி?

தினமும் காலை 7:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை 8 மணி நேரம் பயிற்சி மேற்கொள்ளும் வைபவ், குறைந்தது 600 பந்துகளை எதிர்கொள்கிறார் என அவஉடைய பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

Hero Image

நடந்து முடிந்த ஐபிஎல் 2026 தொடரில் 237-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில், மொத்தம் 776 ரன்கள் குவித்து உலக கிரிக்கெட்டையே வியப்பில் ஆழ்த்தியவர் 15 வயதான வைபவ் சூர்யவன்சி. இவரது இந்த அதிரடி ஆட்டத்தின் காரணமாக, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய சீனியர் டி20 அணியில் இவர் தற்பொழுது சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த அசாத்திய வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் 6 ஆண்டுகால உழைப்பு குறித்து வைபவ்வின் சிறுவயது பயிற்சியாளர் மனிஷ் ஓஜா பிடிஐ (PTI) செய்தி நிறுவனத்திற்கு விரிவான நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார்.

8 மணி நேர கடுமையான பயிற்சி:

வைபவ் தனது 10-ஆவது வயதில் டென்னிஸ் கிரிக்கெட்டில் இருந்து லெதர் பால் கிரிக்கெட்டிற்கு மாறியுள்ளார். பாட்னாவில் உள்ள மனிஷ் ஓஜாவின் அகாடமியில் வைபவ்வின் தினசரி பயிற்சி காலை 7:30 மணிக்கு தொடங்கி, மாலை 4:00 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.

தினமும் 600 பந்துகள்: இந்த 8 மணி நேர பயிற்சியில் வைபவ் தினசரி குறைந்தது 600 பந்துகளை எதிர்கொண்டு விளையாடுவார்.

பயிற்சியின் விபரம்: "தொடக்கத்தில் முதல் 200 முதல் 300 பந்துகளை நான் தனியாக அவனுக்கு த்ரோடவுன் (Throwdown) செய்வேன். நான் சோர்வடைந்த பிறகு அகாடமியின் உதவியாளர்களும், பின்னர் வழக்கமான பந்துவீச்சாளர்களும் அவனுக்குப் பந்துவீசுவார்கள். அவர்களும் சோர்வடைந்ததும், பந்துவீசும் இயந்திரம் (Bowling Machine) மூலம் பயிற்சி அளிக்கப்படும். இந்த தொடர் பயிற்சியே அவனது தற்போதைய பவர்-ஹிட்டிங் ஷாட்டுகளுக்கு முக்கியக் காரணம்" என பயிற்சியாளர் ஓஜா விளக்கியுள்ளார்.

வைபவ் சூர்யவன்சியின் சொந்த ஊர் சமஸ்திபூர் ஆகும். அங்கிருந்து பாட்னாவில் உள்ள கிரிக்கெட் அகாடமிக்கு வர ஒரு பக்கப் பயணத்திற்கு மட்டுமே இரண்டரை மணி நேரம் ஆகும். காலை 7:30 மணிக்குள் அகாடமிக்கு வர வேண்டும் என்பதால் வைபவ் மற்றும் அவரது தந்தை சஞ்சீவ் ஆகியோர் அதிகாலை 5:00 மணிக்கே காரில் புறப்பட்டு விடுவார்கள்.

அதிகாலை 2:00 மணிக்கு எழும் தாய்: வைபவ்வின் தாய் ஆர்த்தி, தினமும் அதிகாலை 2:00 அல்லது 2:30 மணிக்கே எழுந்து விடுவார். அவர் வைபவ் மற்றும் கணவருக்கு மட்டும் சமைக்காமல், சமஸ்திபூரிலிருந்து உடன் வரும் பந்துவீச்சாளர்கள் மற்றும் அகாடமியில் இருக்கும் நெட் பவுலர்கள் என தினமும் 10 முதல் 15 பேருக்குத் தேவையான மதிய உணவை சமைத்து அனுப்பி வைத்துள்ளார். வீட்டில் இருந்து உணவு எடுத்து வராத பல வீரர்கள் வைபவ்வின் உணவையே பகிர்ந்து கொண்டுள்ளனர். ஒரு தாயின் இந்த தியாகத்தை எப்போதும் மறக்க முடியாது என பயிற்சியாளர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

வைபவ்வின் இந்த அசாத்திய வளர்ச்சியைப் பார்த்த பிறகு, பாட்னாவில் உள்ள பெற்றோர்கள் மத்தியில் தங்களது குழந்தைகளையும் கிரிக்கெட் வீரராக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளதாக பயிற்சியாளர் ஓஜா தெரிவித்துள்ளார். தற்பொழுது 5 வயது குழந்தைகளைக்கூட பெற்றோர்கள் அகாடமிக்கு கூட்டி வரத் தொடங்கியுள்ளனர் என்றும், வைபவ் இன்று இந்திய அளவில் பல குழந்தைகளுக்கு ஒரு மிகப்பெரிய முன்மாதிரியாக மாறியுள்ளார் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

தினமும் 8 மணி நேரப் பயிற்சி, 600 பந்துகள்! உலகத்தரம் வாய்ந்த பேட்டராக வைபவ் மாறியது எப்படி?