நடுவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்சிற்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த முதல் டி-20 போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச், 9 ஆவது ஓவரில் டிஆர்எஸ் முறையில் குழப்பம் ஏற்பட்டதால் நடுவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் ஆரோன் பின்ச் ஐசிசி நடத்தை விதி 2.3ஐ மீறியிருக்கிறார்.
பின்ச் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார் இதனால் ஐசிசி இவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவரது நன்னடத்தையில் புள்ளிகள் குறைந்துள்ளது. கடந்த 2 வருடங்களில் இந்த சம்பவம் பின்ச்சின் முதலாவது என்றாலும் இனி தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இதுமாதிரி நடந்தால் பின்ச் போட்டிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்படலாம் என்று ஐசிசி அறிவித்துள்ளது.