ஆசியக் கோப்பை 2023-யின் இறுதிப்போட்டி இன்று பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியும், இலங்கை கிரிக்கெட் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானகா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிஸ்ஸங்க, குசல் பெரேரா அடுத்ததடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அடுத்ததாக களமிறங்கியுள்ள குசல் மெண்டிஸ் மட்டும் 15 ரன்களுக்கு மேல் அடித்து களத்தில் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தார். சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க இவர்கள் இருவரும் வந்த வேகத்தில் டக்-அவுட் ஆகி திரும்ப அதன் பிறகு தனஞ்சய டி சில்வா 4 ரன்களுக்கு வெளியேறினார்.
அவருக்கு அடுத்ததாக வந்த கேப்டன் தசுன் ஷானகா ஒரு ரன்கூட அடிக்காமல் வந்த வேகத்திற்கு வெளியேறினார். இதனால் இலங்கை அணி 5 ஓவர்கள் முடிவிலேயே 6 விக்கெட்களை இழந்து 12 ரன்கள் மட்டுமே எடுத்து. பொறுமையாக விளையாடி குசல் மெண்டிஸ் அடுத்ததாக 17 ரன்களுக்கு அட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அசத்தலாக பந்துவீசி 6 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். பும்ராவும் 1 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இலங்கை அணி தொடர்ச்சியாக தங்களுடைய டாப் ஆர்டர் விக்கெட்களை இழந்த காரணத்தால் இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை அணி இருக்கிறது.
